புள்ளும் சிலம்பின காண் (திருப்பாவை 6) - TPV6
இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
*******************************************
இது திருப்பாவையின் 6-வது பாசுரம்.புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்*
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ*
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு*
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி*
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை*
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்*
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருளுரை:
இவ்வழகிய காலைப்பொழுதில், பறவைகள் எழுப்பும் இனிய சப்தமும், கருடனுக்குத் தலைவனான நம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் வெண்சங்குகள் ஊதுவதால் எழும் இனிய பேரொலியும் உன் செவியில் விழவில்லையா ? அனுபவம் குறைந்த பெண்ணே, விரைவாக உறக்கம் கலைத்து எழுந்திரு !
பூதகி என்ற கொடிய அரக்கியின் முலையில் நச்சுப் பாலை உண்டு அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவெடுத்து வந்த சகடாசுரன் என்ற மாய அரக்கனை உதைத்து அழிக்க தன் திருவடியை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் நாகப் பஞ்சணையில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஏழு உலகங்களிலும் உள்ள அசையும், அசையா, உயிருள்ள மற்றும் ஜடப் பொருள்களில் ஆதிமூலமாக உறைந்திருப்பவனும், அவதாரங்களுக்கு காரணனும் ஆன அப்பரந்தாமனை
பெரும்பக்திமான்களான முனிவர்களும் யோகிகளும் தங்கள் சிந்தையில் நிறுத்தி செய்த தியானத்தை மெல்லக் கலைத்து, சிறிதும் பதட்டமின்றி அரி நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டாகும் பேரோசை நம் உள்ளம் புகுந்து நம்மைக் குளிர (பேருவகை கொள்ள) வைக்கிறது ! பாவை நோன்பிருந்து, அம்மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் !
பாசுர விசேஷம்:
ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியில் முதல் பாசுரமாக, தனது தந்தையும் ஆச்சார்யனுமான பெரியாழ்வாரை ஆண்டாள் துயிலெழுப்புவதாக (ஐதீகம்) அமைந்த பாடலாக இருப்பதாலோ என்னவோ, அற்புதமான நயமுடனும், சுவையுடனும் இப்பாசுரம் விளங்குகிறது! பின்னர் விளக்கம் வருகிறது.
ரம்யமான அதிகாலைப் பொழுதில் பெருமாள் கோயில் கோபுர அழகும், மேலே பறக்கின்ற பறவைகள் சப்தமும், சங்கொலியும், அடியவர் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தபடி கோயிலுக்கு விரைவதும், பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருள் வடிவும் என்று ஒரு அழகான காட்சி மனக்கண்முன் விரிகிறதல்லவா?
பெருமானின் வெண்சங்கு 'பேரரவம்' செய்தாலும், அது செவிக்கு இனிமையான சப்தம் தான். சக்கர வடிவில் அசுரன் வந்ததால் அது "கள்ளச்சகடம்" ஆயிற்று! 'கள்ளச் சகடம், கலக்கழிய, காலோச்சி' என்று அப்பாசுரவரியில் எதுகையில் ஒலிக்கும் 3 அழகான வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள்!
பாற்கடல் ஆதிசேஷன் வெள்ளத்து அரவாம். அங்கு வித்தான பரம்பொருள் பள்ளி கொண்டிருப்பதை ரசமாக "துயிலமர்ந்து" என்கிறார் கோதை நாச்சியார். இங்கு "அமர்ந்து" என்பதற்கு ரட்சிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்! அதெப்படி உறக்கத்தில் இருந்தவாறு அடியவரைக் காப்பது? யோக நித்திரையில் இருக்கும் அம்மாயனுக்கு அது சாத்தியம், அவ்வளவு தான்!
அடியவரான முனிவர்களும் யோகிகளும், ஹரி மந்திரத்தை ஒரு தினசரி கடனாக, வாய் வார்த்தையாக உச்சரிக்கவில்லை, பரமனை "உள்ளத்துக் கொண்டு" ஆத்மார்த்தமாக அவன் பேர் பாடுகிறார்கள்! "மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்" என்பது சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் பெரும் கோஷமாகும் crescendo-வை குறிக்கிறது! அப்பேரரவம் கேட்ட மாத்திரத்தில் எல்லா சங்கடங்களும் மறந்து போய், மனதில் மந்தகாசமான அமைதி ஏற்படுகிறது! (உள்ளம் குளிர்ந்தேலோர்) இங்கு பேரரவம் அமைதியைத் தருகிறது (oxymoron)
"மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்" என்பதற்கு இன்னொரு ரசமான விளக்கமிருக்கிறது! முனிவர்கள் யோகிகளின் உள்ளத்தில் பரமன் உறைந்திருப்பதால் ("உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்"), அவர்கள் தங்கள் தியானத்தைக் கலைக்கையில், பரமனின் யோக நித்திரை கலைந்து விடாத வண்ணம் கவனமாக "மெள்ள" எழுகின்றனர்!
பெரியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:ஆண்டாள் பெரியாழ்வாரை "பிள்ளாய்" என்று அழைப்பது சரியா? அறியாத்தனமாக, பரந்தாமனே சர்வலோக ரட்சகன் என்பதை சற்று மறந்து, பட்டர்பிரான் பரமனுக்கே மங்களாசாசனம் (திருப்பல்லாண்டு மூலம்) செய்து வாழ்த்தி விட்டார்! பக்தியும் அன்பும் மிகுந்து, ஞானத்தை மறைத்து அவ்வகை "அஞ்ஞானம்" உண்டாவதையே, "ஞான விபாக காரியமான அஞ்ஞானத்தாலே வருமவையெல்லாம் ..." என்று ஸ்ரீவச்சன பூஷணம் சுட்டுகிறது.
புள்ளரையன் கருடாழ்வாரைக் குறிக்கிறது. பெரியாழ்வார் கருட அம்சமாக அவனியில் அவதரித்தவர். கிருஷ்ணலீலாவில் பெரியாழ்வாருக்கு மிகவும் பிடித்தமான பூதகி வதத்தை ஆண்டாள் "பேய்முலை நஞ்சுண்டு" என்று சுட்டுவதன் வாயிலாக, இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புவதாகச் சொல்வது பொருத்தமானதே.
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்" என்று நாச்சியார் பாடும்போது, விஷ்ணுவை சதாசர்வ காலமும் சிந்தையில் நிறுத்திய விஷ்ணுசித்தரான பெரியாழ்வாரைத் தான் குறிப்பில் உணர்த்துகிறார்!
பாசுர உள்ளுரை/குறிப்புகள்:
1. பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யனுக்கு அவனது குரு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாக பெரியோர் உள்ளுரை கூறுவர்.
2. இப்பாசுரம் தொடங்கி அடுத்த பத்து பாசுரங்கள் (மொத்தம் 10), முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை. இவை பத்து ஆழ்வார்களைக் (ஆண்டாள், மதுரகவியார் தவிர்த்து) குறிப்பதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு ! குறிப்பாக இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புகிறது.
3. முதலில் துயில் கலைந்து எழுந்த மாந்தர், பகவான் மேல் பக்தி கொண்ட இன்ன பிறரையும் (அடியார்கள்) எழுப்பி, கண்ணனை தரிசித்து வணங்கி போற்றிப் பாடி ஆனந்தம் அடைய, தங்களுடன் கூட்டிச் செல்வதாக அமைந்திருப்பது, பகவத் விஷயத்தை ததீயரோடு கூட்டாக அனுபவிக்க வேண்டிய தத்துவத்தை வலியுறுத்துகிறது. இதை, முனிவர்களும் (பகவத் குணானுபவம் கொண்டு பரம்பொருளை உணர்ந்தவர்கள்) யோகிகளும் (பகவத் கைங்கர்யம் செய்யும் அடியார்கள்) ஒன்றாகச் சேர்ந்து சென்று அரி நாமத்தை ஓதுவதாகப் பாடப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம் அல்லவா ?
4. துயிலெழுப்பும் முதல் சப்தம் பட்சி (கருடன்)யிடமிருந்து வெளிப்படுவதாக பாடியிருப்பது, பகவானை அடையும் வழியை உபதேசிக்கும் ஆச்சார்யனை முன்னிறுத்துவதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு.
5. புள்ளரையன் கோயில் அஷ்டாக்ஷரத்தையும், அங்குள்ள சங்கு பிரணவத்தையும் குறிப்பதாகவும் உள்ளர்த்தம் உண்டு.
6. இப்பாசுரத்தை தத்துவார்த்தமாக நோக்கும் பெரியோர், அடியாரின் சத்வ குணம் 'வெள்ளை விளிசங்காகவும்', அகங்காரமும் (கர்வம்) மமகாரமும் (உலகப்பற்று) 'பேய் முலையாகவும்', அவற்றால் விளையும் பாவங்கள் 'நஞ்சாகவும்', புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் உள்ளத்து உணர்வுகள் 'கள்ளச் சகடமாகவும்', சம்சார பந்தம் 'வெள்ளத்தரவாகவும்' உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர்.
7. ஆகவே, நற்குணம் கொண்ட அடியார்கள் மற்றும் ஆச்சார்யனின் துணையோடு, அரி நாமத்தை விடாமல் ஓதுவதன் மூலம், ஆகாதவற்றை விலக்கும் வைராக்கியம் பெற்று (கலக்கழியக் காலோச்சி !) பரமனை பற்ற முடியும்.
8. இப்பாசுரத்தில் பஞ்சமூர்த்திகளும் பாடப்பட்டுள்ளனர்.
"வித்தினை" எனும்போது பரம்பொருளான வைகுண்டநாதனையும்,
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது விபவ அவதார கண்ணனையும்,
"புள்ளரையன் கோயில்" எனும்போது அர்ச்சவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,
"உள்ளத்துக் கொண்டு" எனும்போதுஅந்தர்யாமியான பரமனையும்
கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக பெரியோர் உள்ளுரை கூறுவர்.
புள்ளரையன் கோயில் - கோயில்களில் நாம் வணங்கும் அர்ச்சாவதார சிலை ரூபத்தில் தான் பரமன் முழுமையாக எழுந்தருளியிருக்கிறான்! அதனால் தான் ஆலய வழிபாடு சிறப்பு பெறுகிறது. ஆக, ஆயர்ப்பாடியில் திருமாலின் கோயில் இருந்திருக்கிறது. அது போலவே, ராமரும் சீதையும் சென்று வழிபாடு செய்த கோயில் பற்றி பழங்குறிப்புகள் உள்ளன.
9. புள் என்றால் பறவை. திருப்புள் என்றால் உயர்ந்த பறவை, ராமாயணத்தில் வரும் ஜடாயுவைப் போல! ஜடாயுவுக்கு மோட்சம் கிடைத்த திருப்புட்குழி என்ற வைணவ திவ்யதேசமாக அறியப்படுகிறது. இத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 273 ***






























